பதிவு செய்த நாள்
18
பிப்
2014
11:02
நாகர்கோவில்: கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற வருஷாபிஷேக பூஜைகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கடல் சங்கமிக்கும், கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு பிப்ரவரியில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் வருஷா பிஷேகம், நேற்று, பல்வேறு பூஜைகளுடன் நடந்தன. காலையில், கணபதி ஹோமம், நவகலச பூஜையும், 10:00 மணிக்கு, சோடாஷாபிஷேகம் என்ற, 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின், ஒன்பது வெள்ளிக் கலசங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு, கலசபூஜை நடத்தப்பட்டு, தேவிக்கு, கலசாபிஷேகம் நடைபெற்றது.மதியம், வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு, உச்சபூஜையும், இரவு, 8:00 மணிக்கு, அம்மன் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், வெள்ளி சிம்மாசனத்தில், தாலாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.