பதிவு செய்த நாள்
27
பிப்
2014
11:02
நாகர்கோவில் : சிவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடங்கியது. கோபாலா, கோவிந்தா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். சிவராத்திரி விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் வித்தியாசமாக கொண்டாடப் பட்டு வருகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடி சென்று வழிபடுவது இம்மாவட்டத்தில் சிவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாலம் ஆகிய இடங்களில் 12 சிவாலயங்கள் உள்ளது. சிவனும், விஷ்ணுவும் ஒன்று, அகந்தை கூடாது என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் சிவராத்திரி விழாவுக்காக சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. முஞ்சிறையில் அமைந்துள்ள திருமலை மகாதேவர் கோயிலில் காவி உடை அணிந்த பக்தர்கள் கையில் விசிறியும், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓட்டத்தை தொடங்கினர். கோபாலா, கோவிந்தா என்று கோஷமிட்டு ஓட தொடங்கிய பக்தர்கள் நேற்று நள்ளிரவிலும் ஓடி இன்று மாலைக்குள் திருநட்டாலம் கோயிலில் தங்கள் ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். இந்த பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஓட்டத்தில் கலந்து கொள்கின்றனர். கார், பைக்குகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் இன்று காலையில் தொடங்கி மாலையில் நிறைவு செய்வர். இந்த சிவாலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.