பதிவு செய்த நாள்
05
மார்
2014
10:03
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில் பணியாளர்களுக்கு மனித நேய பண்பு பயிற்சி முகாம், நேற்று நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாவட்டத்திலுள்ள கோவில்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு மனித நேய பண்பு பயிற்சி முகாம் நடந்தது. செயல் அலுவலர்கள் சிவராமசூரியன், சரவண பவன், வெற்றிச்செல்வன், ஆய்வாளர் சேகர் முன்னிலை வகித்தனர். அறநிலையத்துறை முன்னாள் உதவி ஆணையர் முத்து பழனியப்பன் பேசியதாவது: மனித நேய பண்பு பயிற்சி என்பது அரசு துறைகள் அனைத்திற்கும் பொதுவானது. ஆனால், கோவில் பணியாளர்களுக்கும், மற்ற துறைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. மக்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு தேடியே, கடவுளை நாடி வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்களுக்கு அமைதியும், அன்பான உபசரிப்பும் தேவை. கடவுளுக்கு சேவை செய்யும் பாக்யம் கிடைத்த நாம், அவருடைய பக்தர்களையும், மதிக்கப்பழக வேண்டும். கொங்கு மண்டலத்தில், உபசரிப்பு இயற்கையாக அமைந்தது என்றாலும், இறுதி வடிகால் தேடி வரும் பக்தர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் நமது செயல்பாடுகள், எண்ணம், பேச்சு, பணிவு ஆகியவை இருக்க வேண்டும். கோவிலுக்கு நுழையும் பக்தர்களை அன்போடு வரவேற்று, அவர்களுக்கு உதவிட வேண்டும். ஒரு கோவில் என்பது ஆகம விதிப்படியும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். பணிபுரிபவர்களும் அப்படியே இருக்க வேண்டும். பூஜை, அலங்காரம் ஆகியவை, ஆகம விதிப்படியே நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பயிற்சி முகாமில், மாவட்டத்திலுள்ள கோவில்களை சேர்ந்த பணியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.