பதிவு செய்த நாள்
10
மார்
2014
12:03
மயிலாப்பூர்: மயிலாப்பூரில், பங்குனி திருவிழாவையொட்டி, நேற்று கபாலீசுவரர், அதிகாரநந்தி வாகனத்தில் வீதியுலா வந்தார். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், பங்குனி திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று அதிகாலை 6:00 மணிக்கு, அதிகாரநந்தி வாகனத்தில், கபாலீசுவரர் எழுந்தருளி, கோபுர வாசலில் காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே அவரை தரிசிக்க கோவில் வாசலில் குவிந்திருந்தனர். கந்தருவி வாகனத்தில், கற்பகாம்பாளும், கந்தருவன் வாகனத்தில் சிங்காரவேலரும் எழுந்தருளினர். நேற்று காலை 10:00 மணிக்கு, தெற்கு மாட வீதியில், குளக்கரையில், திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிக்கும் விழா நடைபெற்றது. அதையடுத்து, திருஞானசம்பந்தர், அவரது தந்தையார் சிவபாத இருதயர் ஆகியோர், கபாலீசுவரருடன் கோவிலுக்கு எழுந்தருளினர். இந்த நிகழ்ச்சியில் கபாலீசுவரர் முன்பு, திருக்காரணி திருக்கயிலாய வாத்திய குழு இசைத்த தாரை, பூரி, திருச்சின்னம், மேளம் உள்ளிட்ட வாத்தியங்கள், பக்தர்களை கவர்ந்தன. நேற்று இரவு 9:00 மணிக்கு, பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களில், கபாலீசுவரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் ஆகியோர் வீதியுலா வந்தனர்.
இன்று காலை, 9:00 மணிக்கு, புருஷாமிருக வாகனத்தில் கபாலீசுவரர், சிங்க வாகனத்தில் கற்பகாம்பாள், புலி வாகனத்தில் சிங்காரவேலர் எழுந்தருளினர். இரவு 9:00 மணிக்கு நாகம், காமதேனு, ஆடு வாகனங்களில் வீதி உலா நடக்க உள்ளது.