மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், நேற்றுஅறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், பங்குனி திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, காலை, 1.00 மணிக்கு, திருஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசச் செட்டியாரின் உற்சவ மூர்த்திகள், தெப்பக் குளத்திற்கு எழுந்தருளினர்.அங்கு, சம்பந்தர், சிவநேசச் செட்டியாருக்கு அபிஷேகம் நடந்தது. எலும்பை பெண்ணாக்கி அருளல் நிகழ்ச்சியில், சம்பந்தரின், மட்டிட்ட புன்னையங் கானல் பதிகத்தை ஓதுவார், பண்ணோடு பாட,பக்தர்கள் சம்பந்தரை வழிபட்டனர்.பின் சம்பந்தர் உள்ளிட்ட மூவரும், கோவிலுக்கு எழுந்தருளினர். அங்கு, பிற்பகல் 3:00 மணிக்கு,அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், வெள்ளிவிமானத்தில் கபாலீசுவரர், கற்பகாம்பாம்பாள்,சிங்காரவேலருடன் வீதி உலா புறப்பட்டது.திருவிழாவை ஒட்டி, மயிலாப்பூரில், பல இடங்களில் பிரிஞ்சி உள்ளிட்ட சாத வகைகள், மோர், பானகம், குளிர்பானம் உள்ளிட்ட உணவுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
தங்கசாலையில்...: தங்கசாலையில் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்தில் தீபாராதனையுடன் கோவில் பிரகாரத்திலிருந்து வெளிவர, அவரை நோக்கியபடி அறுபத்து மூவர், விநாயகர், முருகன் உள்ளிட்ட மற்ற உற்சவ மூர்த்தியரும் மேளதாளத்துடன் மாடவீதிகளில் பவனி வந்தனர்.
நாளை திருக்கல்யாணம்:மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், நாளை காலை நடராஜப் பெருமான் வீதியுலாவும், தீர்த்தவாரியும் நடக்க உள்ளன. இரவு 700 மணிக்கு, மயில் வடிவில், கற்பகாம்பாள், கபாலீசுவரரை வழிபடுதல், திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன. வரும், ௧௮ம் தேதி, விழா நிறைவு திருமுழுக்குடன், விடையாற்றி உற்சவம்துவங்குகிறது.அதேபோல், மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவிலில், நாளை இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.