பதிவு செய்த நாள்
22
மார்
2014
10:03
பல்லடம் : பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தில் உள்ளது பரமசிவன் கோவில். 800 ஆண்டு பழமைவாய்ந்த இக்கோவில், மன்னராட்சிக்கு பிந்தைய கால கட்டத்தில், சதுர வடிவிலான ஓட்டு கட்டடத்தில், பிரமிடு அமைப்பில், கருவறை, முன் மண்டபம், அர்த்த மண்டபம் வடிவில் கட்டப்பட்டுள்ளது. நாயக்கர், பாளையக்காரர்கள் கட்டப்பட்ட கோவிலுக்கான சிற்ப அடையாளங்கள் காணப்படுகின்றன.கருவறைக்குள் சூலாயுதம் உட்பட ஏழு வேல் அமைக்கப்பட்டு, துணி திரையால் மறைக்கப்பட்டுள்ளது. முன்புறம் பிற்காலத்தில் வைக்கப்பட்ட, ஆவுடையார் இல்லாத லிங்கம், சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளதாக, செவி வழிச்செய்திகள் உள்ளன.கோவில் முன், நூற்றாண்டு பழமையான, அரிய வகை தொட்டி மரம் உள்ளது. அந்தக்காலத்தில், வனப்பகுதியாக இருந்ததாகவும், மேய்ச்சலுக்கு வந்த பசு பால் சொரிந்ததாகவும், அப்பகுதியில் சர்ப்பம் வசித்து வந்ததாகவும், அங்கு லிங்க வடிவ கல் இருந்ததாகவும், கந்தசாமி, இங்கு அமர்ந்து அருள்பாலித்து வருவதாகவும் மக்கள் சொல்கின்றனர். அதையடுத்து, கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.சிவன் கோவில்களில் இருக்கும் அரிய வகை மரமான வன்னி மரமும், அரசு மரமும் உள்ளன. சைவ முறைப்படி பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருவறைக்கு எதிரே நந்தி சிலையும், கோவிலுக்கு வெளியே பழமையான கல்லால் ஆன தீபஸ்தம்பமும் உள்ளன. தீபஸ்தம்ப மண்டபத்தில், பாளையக்காரர்கள், நாயக்கர்கள், சீன வணிகர்கள் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நவக்கிரகங்கள், வட்ட வடிவில், ஒவ்வொரு திசையை பார்த்து அமர்ந்துள்ளது, வேறெங்கும் இல்லாத சிறப்பு. கருவறை முன், துவார பாலகர்களுக்கு பதில், வலதுபுறம் முருகனும், இடதுபுறம் விநாயகரும் எழுந்தருளியுள்ளனர்.கோவில் மேற்கூரை, சக்திகளை ஒருங்கிணைக்கும் பிரமிடு அடிப்படையில், கலசங்கள் இல்லாத கோவிலாக அமைந்துள்ளது. கோவிலுக்குள் வவ்வால்கள் அதிகளவு வசித்து வருவதும், அமாவாசைதோறும் கருவறைக்குள் நாகம் வந்து செல்வதும் அதிசயமானதாக கருதப்படுகிறது.முன்மண்டபத்தின் முன், மெத்தை ஒன்று உள்ளது. அது, சிவன் அமர்வதற்காக அமைக்கப்பட்டதாக ஒரு தரப்பினரும், ஆதிகாலத்தில் இங்கு சாமி வந்து குறி சொல்பவர் அமர்ந்தது என்றும் கருத்து உள்ளது. ஆனால், தற்போதும் மெத்தை பராமரிக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், மெத்தையையும் வணங்கிச் செல்கின்றனர்.பாம்பு கடித்தவர்கள், இங்கு வந்து திருநீறு, தீர்த்தம் போட்டுச்சென்றால், உடல் பிரச்னை தீரும்; எந்த பிரச்னை இருந்தாலும், மனமுருகி வேண்டினால் தீர்வு கிடைக்கும்; மனநோயாளிகள், தீராத உடல் நோய் உள்ளவர்கள், ஒரு மண்டலம் தங்கியிருந்து வணங்கினால், நோய் தீரும்; தொட்டி மரத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் போன்ற நம்பிக்கைகள் பக்தர்களிடையே உள்ளது. திருப்பூர் பல்லடம் ரோட்டில், அருள்புரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, இக்கோவிலுக்கு நடந்து செல்லலாம்.