பதிவு செய்த நாள்
05
ஏப்
2014
10:04
மன்னார்குடி: மன்னார்குடியிலுள்ள ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி தேரோட்ட விழா விமரிசையாக நேற்று நடந்தது. இதில், பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், வைணவ ஸ்தலங்களில் புகழ் பெற்றதும், தென்திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, வருடம்தோறும் பங்குனி பிரம்ம உற்ஸவ திருவிழாவில் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு நேற்று (4ம் தேதி) மதியம், 2 மணியளவில் பங்குனி தேரோட்ட விழா நடந்தது.
முன்னதாக, உற்ஸவ திருவிழாவில், ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமி,18 வாகனங்களில், 18 அலங்காரங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கோவிலில் தான், பங்குனியில் தேரோட்டமும், செங்கமலத்தாயாருக்கு ஆடியில் தேரோட்டமும் நடத்தப்படும். தமிழகத்தில் ஒரு வருடத்தில் இரண்டு முறை தேரோட்ட விழா நடத்தப்படும் கோவில் என்னும் சிறப்பை பெற்றுள்ளது.
தேரோட்ட விழாவை முன்னிட்டு, செங்கமலத்தாயார் மற்றும் ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. தொடர்ந்து, ராஜகோபால ஸ்வாமி ராஜ அலங்காரத்தில் ருக்குமணி, சத்யபாமா சமேதரராக, நேற்று காலை 8 மணியளவில், பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டார். பின்னர், மதியம், 2 மணிக்கு நடந்த தேரோட்ட விழாவில், பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.