பதிவு செய்த நாள்
07
ஏப்
2014
12:04
திருத்தணி : முருகன் கோவிலில், கடந்த மாதத்தில், உண்டியலில், 51.60 லட்சம் ரூபாய் ரொக்கம், 352 கிராம் தங்கத்தை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துவிட்டு, தங்களது நேர்த்தி கடனாக, பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில் கடந்த, 5ம் தேதி முதல், இம்மாதம் 4ம் தேதி வரை, பக்தர்கள் அளித்த காணிக்கையை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர் மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், ஊழியர்களால் ரொக்கம், தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் என, தனித்தனியாக பிரித்து எண்ணப்பட்டது. இதில், 51,60,217 ரொக்கம், 352 கிராம் தங்கம், 4,250 கிராம் வெள்ளி ஆகியவை கோவிலுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.