தமிழ் புத்தாண்டு: கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 01:04
ஆனைமலை : புத்தாண்டை முன்னிட்டு ஆனைமலையை சுற்றியுள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனைமலை அடுத்துள்ள சேத்துமடை கிராமத்தில் உள்ளது தெய்வகுளம் காளியம்மன் கோவில். நேற்று சித்திரை மாத முதல் நாளை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக தீர்த்தம் எடுத்துச்செல்ல வந்தனர். ஆனைமலைஅடுத்துள்ள சேத்துமடை கிராமத்தில் அன்னப்பாறை ஆற்றின் கரை அருகில் அமைந்துள்ளது தெய்வகுள காளியம்மன் கோவில். நுாற்றாண்டு பழமையான இந்த கோவிலில் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தக்கிணறு உள்ளது. இந்த பகுதியில் கடுமையான வறட்சியும், பஞ்சமும் நிலவிய காலத்திலும், இந்த கோவிலின் கிணற்று நீர் வற்றாமல் இருந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள காளியம்மன் சுயம்பாக உருவானது ஆகும். இங்குள்ள நாகதாளி மரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் உள்ளவர்கள் புதிதாக வாகனங்களை வாங்கும்போது இங்கு வந்து வாகனத்துக்கு சிறப்பு பூஜை செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனைமலையை சுற்றியுள்ள பிற வட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்கு, தமிழ் புத்தாண்டு தினத்தில் தீர்த்தம் எடுத்து செல்ல இங்கு வருகின்றனர். நேற்று மட்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனம், டெம்போ,லாரிகள், பஸ்களில் வந்தனர். புத்தாண்டு சிறப்பு வழிபாடு: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு மாசணியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 6.30 மணி முதல் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரமணமுதலிபுதூர் மண்கண்டீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருமண தடை அகல , சிவபெருமானுக்கு பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன.