பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
01:04
ஈரோடு: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காவிரி ஆற்றின் நடுவே உள்ள, நட்டாற்றீஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் அருகே, காவிரி ஆற்றின் நடுவே, நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. சித்திரை பிறப்பை முன்னிட்டு, அதிகாலை, நான்கு மணிக்கு நடை திறந்து, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 6.30 மணி வரை, 108 சங்காபிஷேகம் நடந்தது. கடந்த, 11 முதல், 13ம் தேதி மாலை வரை "ருத்ரதிரிசதி சம்புடித லட்சார்ச்சனை நடந்தது. தமிழ் புத்தாண்டு என்பதால், நேற்று அதிகாலை முதல் இரவு வரை நடை திறக்கப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு கம்பங்கூழ், பிரசாதமாக வழங்கப்பட்டது. ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தொடர்ந்து வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்து சென்றனர். காவிரியில் நீர் இல்லாததால், ஈரோடு மாவட்ட பக்தர்கள், ஆற்றில் நடந்து சென்று கோவிலை அடைந்து வழிபட்டனர். கோவில் பூசாரி செந்தில்குமார் கூறியதாவது: அகஸ்தியர், பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்ற ஸ்தலம். சுவாமிக்கு எதிரே அகஸ்தியர் அஞ்சலி கரம் (கும்பிடுவது) கொண்டு நிற்கிறார். இது வேறு எந்த சிவ ஸ்தலத்திலும், காண முடியாது. காவிரியின் நடுபகுதியாக விளங்கும் இங்கு, தன் ருத்ராட்ச மாலையை கழற்றி வைத்து, சிவனை நினைத்து 12 நாட்கள் அகஸ்தியர், தவம் செய்கிறார். தவம் கலைந்த நாளாக, சித்திரை முதல் தேதி கருதப்படுகிறது. நல்ல நாயகி உடனமர் நட்டாற்றீஸ்வரர் என்பது காரண பெயர். அன்னபூரணி சமேத அகஸ்தீஸ்வரர் என்பது காரிய பெயர். திருமணம் ஆகாத ஆண், பெண்கள், 12 வாரங்கள் வழிபட்டால் மணம் கைகூடும் என்பது ஐதீகம். சித்திரை முதல் நாள், சுவாமியை தரிசித்து சென்றால் காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்கள் எண்ணம், என்றார். ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது, தமிழ் புத்தாண்டு தினத்தன்று மட்டும், காவிரி ஆற்றில் நடந்து சென்று நட்டாற்றீஸ்வரரை பக்தர்கள் வழிபட முடியும் என்பது, இக்கோவில், மற்றொரு அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது.