பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
01:04
ஸ்ரீபுரந்தரதாசர் டிரஸ்ட், சென்னை சார்பில், ௪௫௦வது புரந்தரதாசர் ஆராதனை விழா, வெகு விமரிசையாக தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு, தி.நகரில் உள்ள இன்போசிஸ் ஹாலில் இவ்விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. புரந்தரதாசருக்கு விழா, அந்த அமைப்பின் செயலர் ராமகிருஷ்ணனின் வரவேற்புரையுடன் துவங்கியது. இவ்விழாவில், தாசகலாரத்னா விருது, மதுரை எம்.பாலசுப்ரமணியன் (வயலின்) மற்றும் கே.ஆர்.கணேஷ் (மிருதங்கம்), ஏ.எஸ்.கிருஷ்ணன் (மோர்சிங்) கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. மிருதங்க வித்வான் அமரர் கும்பகோணம் ஆர்.என்.கணேசன் நினைவு விருதை, அவரது குடும்பத்தார், தஞ்சை சுப்ரமணியனுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் புரந்தரதாசரை நினைவுகூர்ந்து, அவரது வாழ்க்கை சரித்திர குறிப்பும், பாடல்களும் பாடப்பட்டன. புரந்தரதாசர், கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹம்பிக்கு அருகில் புரந்தரகடாவில், வரதப்பா - கமலாம்பாள் தம்பதிக்கு, ௧௪௮௪ல் பிறந்தார். இவரது தந்தை மிகப்பெரிய வர்த்தக வியாபாரி. ஆகவே, நல்ல செல்வந்தராக திகழ்ந்த குடும்பம். இசை, கன்னடம், வடமொழியில் தாசர் புலமை பெற்று விளங்கினார்.
தந்தையின் வியாபாரத்தை எடுத்து நடத்தி நவகோடி நாராயணனாக திகழ்ந்தார். கருமி குணம் படைத்த இவரிடம், இறைவன் யாசகம் கேட்டு பெற முடியாமல், இவர் மனைவியிடம் மூக்குத்தியை யாசகமாக பெற்று, இவரிடமே விற்க வரும்போது, அது தன் மனைவியுடையது போல் இருக்க, மனைவியிடம் அவளது மூக்குத்தியை கேட்டார் புரந்தரதாசர். இறைவன் அருளால் மற்றொரு மூக்குத்தி பெற்று அதை மனைவி இவரிடம் கொடுக்க, அதன் விவரம் தெரிய வந்தபின் மனம் மாறினார். வந்தது இறைவன் என்றுணர்ந்து, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக தர்மம் செய்து, பண்டரிபுரம் சென்று வழிபட்டார். ஞானம் பெற்ற பின், பாடல்களை பாடத் துவங்கினார். வேதம், உபநிஷத்துகளின் கருத்துக்களை எடுத்து, எளிய கீர்த்தனைகள் மூலம் பாமரர்களுக்கும் புரியும்படி பாடினார். இதில், ௮,000 பாடல்கள் கையெழுத்து பிரதிகளாகவே கிடைத்துள்ளன. இவரது கீர்த்தனைகள் தாசர் பதகளு, தேவர் நாமாக்கள் என்றழைக்கப்படுகின்றன. மாயா மாளவ கௌளை ராகம் இசைப் பயிற்சிக்கு தகுந்தது என்று தேர்ந்தெடுத்து, மாணவ, மாணவியருக்கான பாடாந்திர முறையை அப்பியாச கான வடிவங்களை முறைப்படுத்தி, ஒரு திட்டமாக வகுத்துக் கொடுத்த ஆதி குரு, சங்கீத பிதாமகர் இவரே. இன்றைக்கு பாட்டு கற்றுக்கொள்ளும் அனைவரும் பாடும், சரளி, ஜண்டை, கீழ் ஸ்தாயி வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் ஆகியவை இவரால் இயற்றப்பட்டது. பக்தி ரசமும், உயர்ந்த கருத்துக்களையும் கொண்ட பல கீர்த்தனைகளை பாடி, இமயம் முதல் குமரி வரை, பாத யாத்திரையாக சென்றவர்.
முன்பெல்லாம் தாசரின் கீர்த்தனைகள் கச்சேரிகளில் அதிகம் பாடப்பட்டன. ஆனால், இன்றைய கால கட்டத்தில் மிகவும் குறைந்து விட்டது. மிகவும் எளிதாக பாடக்கூடியதும், புரிந்துகொள்ளக் கூடிய இவரது பாடல்களை பெரிய கலைஞர்களின் கச்சேரியில், பாடக் கேட்பதே அரிதாகி விட்டது. ஆனால், தாசரின் இத்தொண்டமைப்பு, அவரையும், அவரது கீர்த்தனைகளையும் போற்றி விழா எடுப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. விழாவை தொடர்ந்து, கோல்கட்டா வி.என்.சங்கர் கச்சேரி நடைபெற்றது. இவருக்கு பக்கபலமாக மிருதங்கத்தில் தஞ்சாவூர் சுப்ரமணியன், வயலினில் கோவை சந்திரன், கடத்தில் ஏ.எஸ்.கிருஷ்ணன்; தாசரின் மிகப் பிரபலமான புகழ் வாய்ந்த பஞ்சகீதத்தை துவக்கமாக கொடுத்து பாடினார். அடுத்து நம்பி கெட்டவரய்யா தமிழ் கீர்த்தனையை மிக சுகமாக பாடி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சங்கீத பிதாமகர் புரந்தரதாசருக்கு அஞ்சலி செய்யும் வகையில், எடுக்கப்பட்ட இவ்விழா பாராட்டத்தக்கது. ரசிகப்ரியா