கும்பகோணம்: கும்பகோணம், பாலக்காட்டு காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பகோணம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஏ.ஆர்.ஆர். காலனியில் முனீஸ்வரர், பாலக்காட்டு காளியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். பல ஆண்டுகளானதால், பாலக்காட்டு காளியம்மன் ஆலய திருப்பணி விழாக்குழு மற்றும் ஏ.ஆர்.ஆர். காலனி பகுதி மக்கள் இணைந்து திருப்பணி மேற்கொண்டனர். கோவிலில் புதிதாக விநாயகர், முருகன், முனிஸ்வரர், பாலக்காட்டு காளியம்மன் ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன் தினம், பூர்வாங்க பூஜைகளுடன் விழா தொடங்கி, யாகசாலை பூஜையின் முதல் காலம் நடைபெற்றது. நேற்று, 2வது கால யாகசாலை பூஜையும், கும்பாபிஷேகமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.