பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
12:04
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த, செங்கிப்பட்டி அருகே, பூண்டி மாதா ஆலயத்துக்கு செல்லும் திசையை அறியும் வகையில், 53 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி கோபுரம் மே, 1ம் தேதி திறக்கப்படுகிறது. தஞ்சையை அடுத்த, திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா ஆலயம் அமைந்துள்ளது. வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் அதிகளவில், தஞ்சையிலுள்ள பூண்டி மாதா ஆலயத்துக்கும் வந்து செல்கின்றனர். அதனால், மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. வாகனங்களில் வருவோர் பூண்டி மாதா ஆலயம் அமைந்துள்ள திசையை அறிந்துகொள்ளும் வகையில், வழிகாட்டி கோபுரம் ஒன்று ஆலயம் சார்பில், அமைக்க தீர்மானிக்கப்பட்டது. வழிகாட்டி கோபுரத்தை சென்னை அந்தோணி ராஜரத்தினம் குடும்பத்தினர் அமைத்து தர முன்வந்தனர். இதையடுத்து, தஞ்சை- திருச்சி நான்குவழி சாலையில், செங்கிப்பட்டி அருகே திருக்காட்டுப்பள்ளி பிரிவு ரோட்டில், 53 அடி உயரத்தில் புதியதாக, பூண்டி மாதா வழிகாட்டி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மே, 1ம் தேதி மாலை, 6 மணிக்கு புனிதப்படுத்தி, குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி திறந்து வைக்கிறார். இவ்விழாவில், திருவையாறு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ரத்தினசாமி, மைக்கேல்பட்டி மறை மாவட்ட முதன்மைக்குழு ஜான் பன்னீர்செல்வம், பூண்டி மாதா பேராலய அதிபர் செபாஸ்டின், துணை அதிபர் அருள்சாமி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
இத்தகவலை பூண்டி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.