பதிவு செய்த நாள்
06
மே
2014
11:05
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் வீதி உலா நடந்தது. சேலம், சுகவனேஸ்வரர் ஸ்வாமி கோவிலில், அறுபத்து மூவர் வீதி உலா உற்சவம், கோவில் உதவி ஆணையர் மாரிமுத்து தலைமையில் துவங்கியது. தஞ்சை தமிழ் பல்கலை பேராசிரியர் நல்லசிவத்தின் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு, திருவெம்பாவை பெருவிழா கழக அறக்கட்டளை சார்பில், இரண்டு நாட்கள் கோவில் வளாகத்தில், திருமுறை பேருரை, திருமுறை இசை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் திருவீதி உலா ஆகியவை நடந்தது. நேற்று காலை, 8 மணிக்கு இரட்டை விநாயகர், சுகவனேஸ்வரர் மற்றும் சுவர்ணாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சேலம், அம்மாபேட்டை பன்னிரு திருமுறை மன்றத்தாரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, அறுபத்து மூன்று நாயன்மார்கள் மற்றும் ஜ்யோதிர்லிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 5.30 மணிக்கு சேலம், ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரம செயலாளர் ஸ்வாமி யதாத்மானந்தர் சொற்பொழிவாற்றினார். மாலை, 6.15 மணிக்கு இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, அறுபத்து மூவர் திருவீதி உலாவை துவக்கி வைத்தார். ஸ்வாமி அம்பாள் வெள்ளி ரிஷபத்திலும், நாயன்மார்கள், சேக்கிழார் மற்றும் திருமுறைநாதர், 19 பல்லக்குகளிலும் சிறப்பு மேளக் கச்சேரி, பஞ்சவாத்ய இசை, பாரம்பரிய இசை, கோலாட்டம், ஓதுவார் மூர்த்திகள் மற்றும் இறைநெறி மன்றத்தினரின் திருமுறை இசை, தெய்வ திருவுருவ அணிவகுப்போடு திருவீதி உலா நடந்தது. சேலம், முதல் அக்ரஹாரம், தேர் வீதி, இரண்டாவது அக்ரஹாரம், பட்டை கோவில், சின்னக்கடை வீதி, பெரியக் கடை வீதி மற்றும் கன்னிகாபரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது.