பதிவு செய்த நாள்
13
மே
2014
03:05
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். கோவில் திருவிழா மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கை, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, அதிகாரிகள் முன்னிலையில் எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று உண்டியல் திறந்து எண்ணும் பணி துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கிருஷ்ணன், ஆய்வாளர் தேவராஜன், நன்செய் இடையாறு பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், காணிக்கை எண்ணப்பட்டது. முடிவில், இரண்டு லட்சத்து, 63 ஆயிரத்து, 39 ரூபாய், பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். மேலும், ஐந்து பவுன் தங்கம், 38 கிராம் வெள்ளி நகையும் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.