அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2025 05:10
திருத்தணி; திருத்தணி அடுத்த நாபளூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று 15வது ஆண்டாக, உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், 64 பைரவர்களுக்கு சிறப்பு யாகம் நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், 64 பைரவர்களுக்கும் தனித்தனியாக யாகசாலை மற்றும் கலசங்கள் அமைக்கப்பட்டன. நேற்று ஸ்ரீ ருத்ர த்ரிசதி ஹோமம், ரஷா பந்தனம் மற்றும் அகத்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இன்று காலை நான்கு கால யாக பூஜைகள், வடுக பைரவர் பூஜை நடந்தது. பின் 64 பைரவர்களுக்கும் ஸ்ரீ மகா வடுக யாக சாலை பூஜைகளை, 64 சிவச்சாசாரியார்கள் நடத்தினர். பின் மூலவர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவர் காமாட்சி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு பைரவர்கள் மற்றும் உற்சவர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சென்னை, திருவள்ளூர், வேலுார் மற்றும் ஆந்திர மாநிலம் சித்துார் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.