திண்டிவனம்: திண்டிவனம் பெருமாள் கோவில் அருகே டாஸ்மாக் கடை செயல்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கிராமங்களுக்கு ஒரு டாஸ்மாக் கடை, நகரங்களுக்கு வீதிக்கொரு டாஸ்மார்க் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் பள்ளிகள், கோவில்கள், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், திண்டிவனம் பெருமாள் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு மது பாட்டில் வாங்குவோர், இப்பகுதியில் சாலையோரம் உட்கார்ந்து மது அருந்துகின்றனர். இதனால், இவ்வழியே கோவிலுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கோவிலுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.