ஆண்டிபட்டி : ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில், சித்திரைத்திருவிழா நடந்தது. புதிதாக செய்து முடிக்கப்பட்டு வெள்ளோட்டமிடப்பட்ட தேரில், சுவாமி முதல் முறையாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், சித்திரைத்திருவிழா மே 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி திருத்தேரில் பவனி வந்து அருள்பாலித்தார். கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது, புதிய தேரின் வேலைகள் முழுமை பெறாமல் இருந்தது. ரூ. 25 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தேரில், கதலிநரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் முதல் முறையாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜம்புலிபுத்தூரைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புதிய தேரின் வடம் பிடித்து, "கோவிந்தா கோஷத்துடன், தேர் இழுத்தனர்.