பதிவு செய்த நாள்
14
மே
2014
03:05
சென்னை: நேற்று நள்ளிரவு முதல், இன்று நள்ளிரவு வரை, சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளதால், திருவண்ணாமலை கோவிலில், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக, நேற்று காலை முதலே, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்றும் தேவையான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.லட்சக்கணக்கான பயணிகள்திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், மாதம்தோறும், பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவர். சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தில், கிரிவலம் வருவது விசேஷம் என்பதால், அன்று லட்சக்கணக்கான பயணிகள் திருவண்ணாமலையில் கூடுவர். தற்போது சித்திரை மாதம் நடக்கிறது. பவுர்ணமி திதி, நேற்று நள்ளிரவு, 1:56 மணி முதல், இன்று நள்ளிரவு வரை உள்ளது. இந்த கால இடைவௌிக்குள் கிரிவலம் செல்ல, பக்தர்கள், நேற்று முதலே திருவண்ணாமலை புறப்பட்டு சென்றனர்.அவர்களுக்காக, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
400 சிறப்பு பஸ்கள் தயார்: சென்னை கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் பகுதியில் இருந்து, 400 சிறப்பு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, பயணிகளின் வருகைக்கு ஏற்ப இயக்கப்பட்டன.இது குறித்து, விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருவண்ணாமலைக்கு செல்வோரின் எண்ணிக்கை, இன்று அதிகளவில் இருக்கும். இதனால், பஸ் நிலையங்களில், பயணிகள் வரிசைப்படுத்தப்பட்டு, 10 ரூபாய் டோக்கன் வழங்கி, இயக்கத்தை முறைப்படுத்துவோம். கிரிவலம் சென்று திரும்புவதற்கும் தேவையான பஸ்களை இயக்குவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.