மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் 11 திவ்யதேச கோயில்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானதான மணிமாடக் கோயில் எனப்படும் ஸ்ரீபுண்டரீகவல்லி தாயார் சமேத ஸ்ரீ நாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் நேற்று இரவு நடந்தது. இதனை யொட்டி தாயார் மற்றும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 40 மங்கல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீநாராயணப்பெருமாள் தாயாருடன் கோயிலுக்கு எதிரே உள்ள இந்திரபுஷ்கரணியில் இருந்த தெப்பத்தில் எழுந்தருளினர்.அங்கு பட்டாச்சாரியார்கள் பெருமாளுக்கு மகாதீபாராதனை செய்தனர். பின்னர் தெப்பம் புஷ்கரணியை 3 முறை வலம் வந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகையன்,தெப்போற்சவகமிட்டி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.திருவென்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.