பதிவு செய்த நாள்
16
மே
2014
09:05
போடி : போடி சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து, இரண்டு ஆண்டுகளான நிலையில், திருப்பணிகள் முழுமை பெறாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். போடியில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதால், வாழ்க்கையில் மன அமைதி இல்லாதவர்களுக்கு சகல சவுபாக்கியத்தையும் தந்து, சுப்பிரமணியர் அருள்பாலிப்பதாக ஐதீகம். இக்கோயிலின் கோபுரங்கள், ஆலயம் புதுப்பிக்கும் பணியும், திருப்பணிகள், சிலைகளுக்கு வர்ணம் பூசுதல், கொடிமரம் அமைக்கப்பட்டு, இந்து அறநிலையத்துறையால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், கோயில் திருப்பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோயில் சுற்று வளாக தரை தளம் பெயர்ந்து கற்களாகவும், குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று சாமிகளை தரிசனம் செய்ய முடியாத நிலையில் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட பைப்லைன் உடைந்து, பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி பாதியிலே நிறுத்தப்பட்ட கோயில் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க, இந்து அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் திருப்பணிக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.