பதிவு செய்த நாள்
26
மே
2014
01:05
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகேயுள்ள, குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் கல்வெட்டுக்களை படியெடுத்து, மக்கள் பார்வைக்கு வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் சோழர் கள் ஆட்சி நடந்த ஆண்டுகளில் கட்டப்பட்ட, பல கோவில்கள் உள்ளன. இதில் குறிப்பிடும்படியாக, சோழமாதேவி அமராவதி கரையில் அமைந்துள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் உள்ளது. மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்த இந்தக்கோவிலை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், புதுப்பிக்க பொதுமக்கள் குழு அமைத்தனர். ஒரு ஆண்டு பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிக்கு பின், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிேஷகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து, இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த கோவில் சோழ மன்னனின் பட்டத்து அரசி நினைவாக கட்டப்பட்டதால், இந்த கோவில் அமைந்துள்ள கிராமத்துக்கு சோழமாதேவி என்று பெயர் அமைந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட இந்தகோவிலின் சுற்றுமதில் மற்றும் உட்புற சுவர்களில் வட்டெழுத்து முறையில் பல்வேறு கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. இந்த கல்வெட்டுக்களில், கோவில் குறித்தும் பலநுாறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறை குறித்தும் பல அரிய தகவல்கள் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். அவர்கள் மேலும் கூறுகையில், இந்த கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களை, படியெடுத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தால் இன்னும்பல அரிய தகவல்கள் கிடைக்கும். இவை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் தொல்பொருள் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.