உடுமலை: உடுமலை அருகே இருதரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலால் மூடப்பட்ட அம்மன் கோவில், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியம் சனுப்பட்டி வல்லக்குண்டாபுரம் கிராமத்தில், மாகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2007ல் கோவில் திருவிழாவின் போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, வருவாய்த்துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இருதரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால், கோவிலை வழிபாட்டிற்கு திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நேற்று மாலை குடிமங்கலம் போலீசார் முன்னிலையில், கோவிலை கிராம மக்களின் வழிபாட்டிற்கு வருவாய்த்துறையினர் திறந்து வைத்தனர். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.