பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
12:06
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் திருமங்கலம் கிராமத்தில் சிவகாமசுந்தரி உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் தந்வந்தரி மற்றும் சனீஸ்வர பகவான் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கண்டமங்கலம் ஒன்றியம் திருமங்கலத்தில் சிவகாமசுந்தரி உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவிலின் திருக்குட முழுக்கு ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தந்வந்தரி பகவான், சனீஸ்வர பகவான் கோவில்களுக்கு நன்னீராட்டு விழா, சூரியன், சந்திரன் கோபுரங்களுக்கு கலச நன்னீராட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு கோபூஜை, காலை 9 மணிக்கு கணபதி வேள்வி, முதலாம் கால வேள்வியும், மாலை 4 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும் நடந்தது. நேற்று காலை காலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வியும், பகல் 12.20 மணிக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடந்தது. அறக்காவல்குழு தலைவர் கணேசன்ஐயா தலைமை தாங்கினார். கிராம தலைவர் ஜெயராமன், திருவா மாத்தூர் கவுமாரமடம் தண்டபாணி சுவாமிகள், திருவெண்ணைநல்லூர் திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான், வேட்டவலம் செத்தவரை கிராமம் சித்தர்பீடம் மோனசித்தர், புலவர் பாண்டியன், ஈரோடு மாவட்டம் நம்பியூர் மேட்டுக்கரை பாபாகோயில் வெங்கட்ராமன்ஐயா, மயிலம் முனைவர் திருநாவுக்கரசு, புதுச்சேரி சிவம் அறக்கட்டளை சாந்தக்குமார் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துளசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.