பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
02:06
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோவில் திருப்பணி வேலைகள் மற்றும் ஆழித்தேர் செய்யும் பணியை விரைவில் முடிக்குமாறு, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் மதிவாணன் உத்திரவிட்டுள்ளார். திருவாரூர் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள மதிவாணன், நேற்று காலை, கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோவிலுக்கு சென்றார். அங்கு, கோவில் உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் ஜெயகுமார் ஆகியோர், புதிய கலெக்டரை வரவேற்றனர். தியாகராஜர், கமலாம்பாள் உட்பட பல்வேறு ஸ்வாமிகளை வழிப்பட்ட கலெக்டர் மதிவாணன், கோவிலில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் திருப்பணி மற்றும் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் ஆழித்தேர் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பணியை விரைந்து முடிக்குமாறும், அரசு சார்பில் உதவிகள் தேவைப்பட்டால், தகவல் தெரிவிக்குமாறும் அறநிலையத் துறை அதிகாரிகளிடம், கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார். டி.ஆர்.ஒ மணிமாறன், திருவாரூர் ஆர்.டி.ஒ., பரமசிவம் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.