வால்மீகி ராமாயணத்தில், ராமலட்சுமணரை விஸ்வாமித்திரர் தாடகை வதத்திற்காக அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவர்கள், கங்கை நதியின் பெருமையைக் கூறும்படி வேண்டினர். அப்போது முருகனின் அவதாரம் நிகழ்ந்ததால், கங்கைக்கு ஏற்பட்ட பெருமையை விஸ்வாமித்திரர் விளக்கினார். சிவபெருமான் பார்வதியை மணம் செய்து 100 தேவ வருஷங்கள் கழிந்தன. அவர்களுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. வருந்திய தேவர்கள் படைப்புக் கடவுளான பிரம்மாவுடன், கைலாயம் சென்று சிவனைப் பணிந்தனர். சிவனும் உலக உயிர்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு குமாரனை அளிக்க முன் வந்தார். நெற்றிக் கண்ணைத் திறந்து ஆறு தீப்பொறிகளை பரவச் செய்தார். அதனைத் தாங்கிய அக்னிபகவான், கங்கை நதியில் அவற்றைச் சேர்த்தார். கங்கையும் அதைத் தாங்கிச் சென்று, நாணல் காடான சரவணப்பொய்கையில் விட்டாள். அங்கிருந்த ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகன் அவதரித்தார். ராமாயண பாலகாண்டத்தின் 36வது சர்க்கத்தில் இந்த வரலாறு இடம்பெற்றுள்ளது. முருகனின் பிறந்தநாள் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று நிகழ்ந்தது.