திருமணச் சடங்கில் அக்னியைச் சாட்சியாக வைத்து மணமக்கள் வலம் வருவது இந்தக்கால வழக்கம். குறிஞ்சிப் பாட்டு என்ற இலக்கிய நுõலில், முருகப்பெருமான் முன்னிலையில், தண்ணீரை சாட்சியாக வைத்து மணமக்கள் வாழத் தொடங்குவது பற்றிய குறிப்பு உள்ளது.ஒரு பெண் தான் நேசித்த ஆண் மீது, இவன் நம்மைக் கடைசி வரை கைவிடாமல் இருப்பானா என்ற சந்தேகம் கொண்டாள். மனம் உருகி முருகப்பெருமானை வழிபட்டாள். இதை அறிந்த அவளது காதலன், உன்னை என்றும் பிரிய மாட்டேன். பிரிந்தால் தர்மம் தவறிய செயல் செய்தவனாகி விடுவேன் என்றான். அத்துடன், தங்கள் குறிஞ்சி நிலக்கடவுளான முருகனை சாட்சியாக வைத்து, மலையில் இருந்த சுனை நீரைக் கையில் எடுத்து குடித்தான். சத்தியம் தவறினால், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்திருக்கிறார்கள். இப்போது சத்தியமும் இல்லை.. குடிநீரும் இல்லை...பாட்டிலுக்குள் போய்விட்டது விலைக்கு விற்குமளவு!
ஓம் என்னும் பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்வது மயில். இதன் பார்வை பட்ட இடத்தில் நன்மை உண்டாகும் என்பதை,துங்க அனுகூல பார்வைத் தீர செம்பொன் மயில் என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். முருகனின் வேலையும், மயிலையும் முன்னிறுத்தி வேலும் மயிலும் துணை என்று சொல்வோருக்கு மரணபயம் இருக்காது என்பது ஆன்றோர் வாக்கு. குறிப்பாக, ஒரே சமயத்தில் பல விஷயத்தில் கவனம் வைக்கும் அஷ்டாவதானிகள், தசாவதானிகள் போன்றோர், தங்கள் அறிவு தடைபடாமல் இருக்க இந்த மந்திரத்தை ஜெபிப்பர் என வாரியார் கூறுகிறார். இதனையே ஆறெழுத்தாக வேலுமயிலும் என்றும் ஜெபிப்பதுண்டு.