ஹவாயின் கவாய் தீவில் சுமார் நானுõற்று ஐம்பது ஏக்கர் பரப்பளவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இதை ஹவாய் ஆதீனமும், அதைச் சார்ந்த இந்து மடமும் மேற்பார்வை செய்து வருகின்றன. இந்த ஹவாய் ஆதீனத்தை நிறுவியவர் குருதேவா என மரியாதையுடன் அழைக்கப்படும் சத்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமி என்ற அமெரிக்கர். இவர் மறைவுக்குப் பிறகு, மேற்பார்வை செய்து வருபவர் சத்குரு போதிநாத வேலன் சுவாமி. இருவரும், இந்த ஆதீனத்தைச் சேர்ந்த மற்ற துறவிகளும் அமெரிக்கர்கள்தான். இங்குள்ள கடவுள் கோயில் எனும் மற்றொரு கோயில் 1973ஆம் ஆண்டு துவங்கி கட்டி முடிக்கப்பட்டது. அங்கே தினசரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இறைவன் கோயில் எனும் பிரம்மாண்டமான கோயில் கட்டுமானப் பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றது. இது தென் இந்திய பாரம்பரிய கோயில் பாணியில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கோயிலை வடிவமைத்துத் தந்தவர் உலக புகழ் பெற்ற மறைந்த திரு டாக்டர். கணபதி ஸ்தபதி அவர்கள். இதை முழுவதும் கட்டி முடிக்க இந்தியாவிலிருந்து பல ஸ்தபதிகள் சென்றுள்ளனர்.
கடவுள் கோயில் இலங்கையின் பாரம்பரிய சிவன் கோயிலைப் போல் கட்டப்பட்டுள்ளது. இங்கே முதன்மையான தெய்வம் நடராஜர். விநாயகருக்கும், முருகப் பெருமானுக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. அர்த்த நாரீஸ்வரர் மூர்த்தியும் இருக்கின்றது. பிரதான சுவர்களில் நுõற்றெட்டு அரிய சிவதாண்டவ சிலைகள் உள்ளன. தினமும் காலை சூரிய உதயத்துக்கு முன்பே விநாயகர், முருகப்பெருமான் மற்றும் சிவபெருமான் மூவருக்கும் பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன.