பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
01:06
கோவை : பாவம் செய்த வாலி, ராமநாமத்தை ஜெபித்து, தன்னை திருத்திக்கொண்டதின் வாயிலாக மோட்சம் கிடைத்துள்ளது. கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்துவருகிறது.நேற்று வாலிமோட்சம் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: வாலியின் மீது அம்பை ராமர் எய்தார். அப்படியே சரிந்த வாலி, ராமனை பார்த்து, பல கேள்விகளை வரிசையாக தொடுத்தார். சீதையை நீ பிரிந்திருப்பதால் தான் என் மீது அம்பை எய்தாயா, ராவணன் உன் மனைவியை கவர்ந்து சென்றதால், ஏன் என் மீது கோபப்படுகிறாய். சுக்ரீவனோடு நீ கூட்டு வைத்திருந்ததற்கு, என்னோடு கூட்டு வைத்திருந்தால், ராவணன், சீதையை கவர்ந்து செல்ல விடாமல் தடுத்திருப்பேன். இதற்கு பதிலளித்த ராமர், சரணாகதி என்று வந்த சுக்ரீவனை, துரத்தி அடிக்கலாமா, தம்பி மனைவியை கவர்ந்து வைத்துக்கொள்ளலாமா என்றார். பதிலளித்த வாலி, நாங்கள் விலங்குகள், மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்குத்தான் இந்த தர்மம் என்று சொன்னான்.பதிலளித்த ராமர். நீ எப்போது தர்மத்தை தெரிந்து கொண்டாயோ அப்போதே நீ மனிதன், நீ விலங்கு அல்ல என்றார்.ராமனின் அம்பு பட்டவுடன், எல்லர் உயிரும் பிரியும். ஆனால் வாலி உயிர் பிரியவில்லை. ராமரின் அம்பு வழியாக, ராமநாமம் உள்ளே சென்றதும். உடலில் உள்ள ரத்தம் சிந்தியது. அப்போது வாலி தான் செய்தது குற்றம் என்று ஏற்று, சுக்ரீவனையும், அனுமானையும், அங்கதனையும், ராமரிடத்தில் ஒப்படைத்து விட்டு மோட்சம் அடைந்தான்.ராமநாமத்தை ஜெபிப்பவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பதை நாம் இதன் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார்.