அழகர்கோவில் : மதுரை அழகர்கோவிலில் உள்ள பழமையான பழுதான கோபுரம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆபத்து உணராத சிலர் கோபுரம் வழியாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்குள்ள கள்ளழகர் கோயிலின் பழமையான பிரதான கோபுரம் பழுதடைந்துள்ளது. கோபுரத்தின் கீழ்மட்டம் வரை சுதைகள் மற்றும் கற்கள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. இக்கோபுரம் பல ஆண்டாக பயன்பாடின்றி உள்ளது. இதையடுத்து கள்ளழகர் கோயிலுக்கு செல்ல புதிய பிரதான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சென்று கருப்பண சுவாமி சன்னதிக்கும், அதையடுத்து கள்ளழகர் கோயிலுக்கும் செல்ல வேண்டும்.
ஆபத்து உணராத மக்கள் : பழுதான கோபுரம் வழியாக சிலர் கோயில் ஊழியர்களின் குடியிருப்பு பகுதிக்கு செல்கின்றனர். கோபுரம் வழியாக செல்ல நிர்வாகம் தடை விதித்து எச்சரிக்கை பலகையும் ஆங்காங்கே வைத்துள்ளது. எனினும், கோபுரம் வழியாக செல்வது வழக்கத்தில் உள்ளது. கீழே விழும் நிலையில் உள்ள கோபுரத்தின் கற்களின் அருகிலேயே குழுவாக உட்கார்ந்து ஓய்வெடுக்கும் நிலையும் தொடர்கிறது. ஆபத்து ஏற்படும் முன் தடை செய்யப்பட்ட கோபுரம் வழியாக செல்வதை கோயில் நிர்வாகம் தடுக்க வேண்டும். மீறுவோர் மீது அபராதம் வசூலிக்க வேண்டும்.