சோழவந்தான்: ஜெனகைமாரியம்மன் கோயில் வைகாசி பூக்குழி திருவிழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் 9வது நாள் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் மஞ்சள் நீராடி பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து, அம்மனை தரிசித்தனர். நேற்று நகர் மந்தைகளத்தில் பூக்குழி திருவிழா நடந்தது. பக்தர்கள் காவடி, குழந்தையை சுமந்தபடி, வாயில் 18 அடி நீள வேல் அழகு குத்தி தீ மிதித்தனர். இளைஞர் பட்டாளத்தால் பூக்குழியில் இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.பூக்குழியில் தவறி விழுந்த சோழவந்தான் ஜோதி,30, வெற்றிவேலு உட்பட 6 பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பினர். ஏற்பாட்டை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர்கள் சுந்தரம், பூபதி, தர்மராஜ் செய்திருந்தனர்.