பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
02:06
கோவை : கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சியோடு நேற்று நிறைவடைந்தது. கோதண்டராமர் கோவிலில், ஜூன் 2ம் தேதி முதல், நேற்று வரை 14 நாட்களாக கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்தது. அன்றாடம் மாலை 6.30 மணிக்கு, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் நிகழ்த்தி வந்தார். ராமாவதாரம் என்ற தலைப்பில் துவங்கிய சொற்பொழிவு, வாமனாவதாரம், சீதாகல்யாணம், இரண்டுவரம், குகன்நட்பு, பாதுகா பட்டாபிஷேகம், மாயமான் உட்பட 14 தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவு நடந்தது. 14வது நாளான நேற்று ஸ்ரீராமர் பட்டாபிஷேக சொற்பொழிவு நடந்தது. இதில், கல்யாணராமன் பேசியதாவது: ராவணன் கும்பகர்ணனை யுத்த களத்துக்கு போகச்சொன்னான். சீதையின் துன்பம் இனியும் அகலவில்லை என்று சொல்லி, யுத்தகளத்துக்கு சென்ற கும்பகர்ணன் உயிரிழந்தான். அடுத்து இந்திரஜித் யுத்தகளத்துக்கு போனான். அப்போது சீதையை விட்டுவிடும்படி ராவணனிடம் வேண்டுகோள் வைத்தான். அது நிறைவேறவில்லை. யுத்தகளத்தில் இந்திரஜித்தும் சரிந்தான்.கடைசியாக, ராவணன் போர்க்களத்தில் இறங்கினான். ராமனை கடவுளாக உணர்ந்தான். ஆனால், அவனிடம் இருந்த அகந்தையால், சரணாகதியாக முடியாமல் உயிரை விட்டான்.ராமர் சீதையை மீட்டு அயோத்திக்கு வந்தார். ராமர் கானகம் சென்றபோது, ராமர், லட்சுமணர், சீதை என்று மூவராக சென்றார். ஆனால், திரும்பி வரும்போது, லட்சத்தும் மேற்பட்ட சேனைகள், படைகளுடன் திரும்பினார். பெற்றோரின் பேச்சை கேட்டு கானகம் சென்றதால், அனுமன் என்ற சிறந்த தொண்டர் கிடைத்தார். ராமநாமத்தை ஜெபிப்பதாலும், கேட்பதாலும் நமக்கு அழியாத செல்வம் கிடைக்கும்.இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார்.