ஒருசமயம் முகவ்கிஸ் என்னும் எகிப்திய மன்னர், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு, பல பரிசுகளை அனுப்பி வைத்தார். அந்த பரிசுகளில் ஒன்றாக ஒரு மருத்துவரும் வந்தார். அந்த மருத்துவர் மதினாவிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டபோதிலும், அவரிடம் ஒருவர் கூட வைத்தியம் பார்க்கச் செல்லவில்லை. தான் ஒரு அன்னியர் என்பதால் தன்னிடம் யாரும் வைத்தியம் பார்க்க வரவில்லையோ என்று நினைத்து வேதனையடைந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அந்த மருத்துவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி, “மருத்துவரே! நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள். அல்லாஹ்வின் அருளால் உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்பட வில்லை. ஏனெனில், திருக்குர்ஆனின் போதனைப்படி நாங்கள் பசித்த பின்னரே உண்போம். அதுவும் குறைத்தே உண்போம். ஆகவே, நோய் எங்களிடம் அதிகம் அண்டுவதில்லை,” என்றார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு இனிய மொழி பேசியதால், அந்த மருத்துவர் மிகவும் மகிழ்ந்தார்.பார்த்தீர்களா! மனவருத்தத்தில் இருந்த மருத்துவரிடம் நபிகள் பேசிய சில அன்பான வார்த்தைகள் அவரை மகிழ்ச்சிப்படுத்திவிட்டது. நாமும் பேச்சினில் அன்பை நிறைப்போம். அனைத்து இதயங்களையும் நம் பக்கம் திருப்ப, இந்த ரமலான் நோன்பு காலத்தில் உறுதி எடுப்போம்!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19