பதிவு செய்த நாள்
30
ஜூன்
2014
11:06
நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான இக்கோயில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். 24 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இங்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேவபிரஸ்ன விதிப்படி கோயில் தெற்கு நுழைவு வாயிலில் ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த கோபுரத்தை தினமலர் குடும்பத்தினர் உபயமாக கட்டிக்கொடுத்துள்ளனர். பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்த பூஜைகள் நேற்று காலை வரை தொடர்ந்து நடைபெற்றது.
நேற்று காலை 4 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை தொடங்கியது. 5.30-க்கு பரிவார யாக சாலை பூர்ணாகுதி, 6 முதல் 7 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 7 மணிக்கு ஸ்பரிசாகுதி, நாடிசந்தனம், தத்வாஅர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. 8 மணிக்கு யாக சாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ராஜகோபுரம், மூஸ்தான விமானம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான மூர்த்திக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைநடைபெற்றது.
இதில் தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர். லட்சுமிபதி, அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமி, திருவம்பல தேசிய ஞான பிரம்மா பரமாச்சாரிய சுவாமிகள், சுவாமி சைதன்யானந்தஜி, திருவிதாங்கூர் அரண்மனை மகாராணி கவுரி லட்சுமிபாய், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், நகராட்சி தலைவி மீனாதேவ், நாகர்கோவில் எம்.எல்.ஏ. முருகேசன், தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், கும்பாபிஷேக கமிட்டி செயலாளர்கள் சீனு, கண்ணன் மற்றும் நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு காலை ஒன்பது மணி முதல் இரவு வரையிலும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை அன்ன சேவா சங்கத்தை சேர்ந்த 350 தன்னார்வ தொண்டர்கள் இடைவிடாது பரிமாறினர். மாலை 6.30-க்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏழு மணிக்கு தலா 40 நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களுடன் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அழகம்மன்கோயில் திருப்பணிக்குழுவினர் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், தேவசம்போர்டு அதிகாரிகளும் இணைந்து செய்துள்ளனர்.