மீனாட்சி அம்மன் கோயிலில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2014 03:07
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு சித்திரை வீதியில் மின் வாரிய ஊழியர்கள், மரங்களை வெட்ட கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், மரங்களின் அருகே மின் கம்பங்களை ஊழியர்கள் ஊன்றி விட்டு சென்றனர். பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகே துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து கோயிலுக்கு மின் வயர்களை மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு பதிலாக பாதாள அறை திட்டம் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. நிதி ஒதுக்காததால் திட்டம் முடங்கியது. மின் கம்பங்கள் வழியாக மின் வயர்கள் கொண்டு செல்லப்பட்டன. பராமரிப்பு என்ற பெயரில் சித்திரை வீதிகளில் உள்ள மரங்களை மின் வாரிய ஊழியர்கள் அவ்வப்போது வெட்டி வந்ததால், மரங்களின் எண்ணிக்கை குறைந்தது. கிளைகளை வெட்டியதால் பழமையான மரங்கள் பட்டுப்போயின. இந்நிலையில், தெற்குச்சித்திரை வீதி பூங்காவில் மின் கம்பங்கள் ஊன்ற, மின் வாரிய ஊழியர்கள் நேற்று வந்தனர். இதற்காக, எஞ்சியுள்ள சில மரங்களை வெட்ட முயன்றனர். தகவலறிந்த கோயில் இணை கமிஷனர் நடராஜன் மரங்களை வெட்ட அனுமதி மறுத்தார். எனினும், மரங்கள் அருகே 3 மின் கம்பங்களை ஊழியர்கள் ஊன்றி விட்டு சென்றனர். மின் வாரிய தெற்கு கோட்ட உதவி செயற்பொறியாளர் மோகன் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன் பலத்த காற்று வீசியதில் மரம் ஒடிந்து தெற்கு கோபுரம் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இப்பகுதி வழியாக கோயிலுக்கு மற்றொரு மின் பாதை அமைப்பதற்காக நேற்று முன்தினம் மின் கம்பங்கள் ஊன்றப்பட்டன. மரங்களை வெட்ட வில்லை, என்றார்.