பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
12:07
சிதம்பரம்: நடராஜர் கோவில் தேர், உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கியதால், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட லூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன மகோற்சவத்தை முன்னிட்டு, நடராஜர் சுவாமி மற்றும் சிவகாமசுந்தரி அம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது. மாலை 3.30 மணிக்கு பருவதராஜ குருகுல சமூகத்தினர், சுவாமிக்கு பட்டு சார்த்தி சிறப்பு வழிபாடு செய்த பின், நடராஜர் சுவாமி தேர் வீதியுலா புறப்பட்டது. கஞ்சித்தொட்டி சந்திப்பில் திரும்பிய போது, தேர் சக்கரத்திற்கு முட்டுக்கட்டை சரியாக போடாததால், தேர் வடக்கு மெயின் ரோடு பக்கம் சென்று, ரோட்டின் குறுக்கே இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் மோதி நின்றது. இதனால், பக்தர்கள் அலறியடித்து ஓடினர். தேரோட்டத்தையொட்டி, வடக்கு மெயின் ரோடு பகுதியில் உயர் அழுத்த மின் வினியோகம் ஏற்கெனவே துண்டிக்கப்பட்டிருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.