பதிவு செய்த நாள்
12
ஜூலை
2014
12:07
ஜம்மு: அமர்நாத் பனி லிங்க தரிசனத்திற்கான, 15வது பக்தர்கள் குழுவினர், ஜம்மு முகாம்களிலிருந்து நேற்று, குகைக் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.ஜம்மு - காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டு தோறும், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.இவர்கள் அனைவரும், ஜம்முவில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நபர்கள் அடங்கிய குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, மாநில போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினரும் செல்வது வழக்கம். இந்நிலையில், 2,249 பேர் அடங்கிய, 15வது பக்தர்கள் குழு, நேற்று, ஜம்மு முகாம்களிலிருந்து, குகைக் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்கு முன், 14 குழுக்கள் குகைக் கோவில் தரிசனத்தை முடித்து, சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதுவரை, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த ஆண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.