பதிவு செய்த நாள்
14
ஜூலை
2014
12:07
வேலூர்: வேலூர் திருமலைக்கோடி நாராயணி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சக்தி அம்மா தலைமையில் நடந்தது. வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம்சக்தி நாராயணி பீடம் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்ரீ நாராயணி அம்மன் கோவில், இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, வேலூர் கோட்டை மைதானத்தில், உலக நன்மைக்காக அஷ்டபந்தனம், சொர்ணபந்தனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், நாட்டுப்புற கலைஞர்கள், புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன் ஊர்வலம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாராயணி அம்மன் கோவிலில், கடந்த 9ம் தேதி காலை, 7 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், 9 மணிக்கு, தத்வார்ச்சனை, ஸ்பர்சாஹூதியும், 10.15 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தது. 11 மணிக்கு, நாட்டின் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை, கோபுர கலசங்கள் மீது ஊற்றி, சக்திஅம்மா மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அப்போது, வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வண்ண மலர்கள் தூவப்பட்டது. தொடர்ந்து, சக்தி அம்மா கோவில், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தினார். கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள், காமாட்சிபுரி ஆதீனம், வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர ஸ்வாமிகள், அணைக்கட்டு எம்.எல்.ஏ., கலையரசு, வேலூர் சப்கலெக்டர் பட்டாபிராமன், திருமலைக்கோடி நாராயணி மருத்துவனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் மேலாளர் சம்பத், தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்குமார், நாராயணி பீடம் அறங்காவலர் சவுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.