பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
11:07
ராமநாதபுரம்: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, ராமநாதபுரம் சேதுபதி நகர் மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் சுவாமி மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெண்கள் தீபமிட்டு தரிசனம் செய்தனர். அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆடி முதல் நாள் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இங்கு, ஆக.11ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
காரைக்குடி: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பெண்கள் மஞ்சள் அரைத்து நேற்று மாலை, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமேஸ்வரம்: ரயில்வே பீடர் ரோடு, வீரபத்ரகாளியம்மன் கோயில் தெரு, மாந்தோப்பு, புதுரோடு, தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மாரி அம்மன் கோயில்களில் நேற்றைய சிறப்பு பூஜையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மண்டபம்: ஓடைத்தோப்பு சந்தன பூமாரி அம்மன், மண்டபம் முகாம் சித்தி விநாயகர், மாரி அம்மன், நாகாச்சி அம்மன், சுந்தரமுடையான் தில்லைநாச்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மண்டபம் சேது நகர் சமயபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வரும் 29ல் முளைப்பாரி விழா நடக்கிறது.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், பாரனூர், வெட்டுகுளம், புல்லமடை, குமிழேந்தல், குலமாணிக்கம் பகுதி முத்துமாரி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கீழக்கரை: உத்திரகோசமங்கை வராஹி மங்கை மாகாளியம்மன், காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சாயல்குடி: தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயிலில் பிடி மண் எடுத்து அன்னபூவன்பட்டி மக்கள் சுவாமி சிலை செய்தது குல தெய்வ வழிபாடு துவக்கினர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன.
முதுகுளத்தூர்: செல்லி அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.