பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
12:07
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை பூச்சாட்டுதலுடன் நேற்று துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், சேலத்தில் எட்டுப்பட்டி மாரியம்மன் கோவில்களிலும், ஆடிப்பண்டிகை விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். தீ மிதி விழா, அலகு குத்துதல், உருளை தண்டம் போடுதல், கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், வண்டி வேடிக்கை என்று பிரம்மாண்டமாக நடைபெறும் ஆடி பண்டிகை விழா எப்போதும் களைகட்டும். முதலில், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் நடத்தி, நிகழ்ச்சி துவங்கும். அதை தொடர்ந்து பிற மாரியம்மன் கோவில்களில், பூச்சாட்டுதல் நடத்தி, ஆடிப்பண்டிகை விழா துவங்கும். கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 12 மணிக்கு அலங்கார ஆராதனை செய்யப்பட்டது. இரவு எட்டு மணிக்கு சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் சார்பில், கிச்சிப்பாளையம், நாராயண நகர், கல்லாங்குத்தூர், அருணாச்சலம் ஆசாரி தெரு, கடை வீதி வழியாக, பூக்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோட்டை மாரியம்மனுக்கு பூக்களை சாத்தி, பூச்சாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு நடத்தினர். குகை மாரியம்மன் கோவில், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில், கடைவீதி மாரியம்மன் கோவில், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு அம்மன் கோவில்களில், பூச்சாட்டுதலுடன் ஆடிப்பண்டிகை விழா நேற்று துவங்கியது. அனைத்து கோவில்களிலும், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அலங்கார ஆராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கூழ் ஊற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இரவு நேரங்களில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைத்து பகுதிகளிலும், நேற்று அம்மன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி சென்றனர்.