பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
12:07
அந்தியூர்: அந்தியூரில் புகழ்பெற்ற குருநாத ஸ்வாமி ஆடிப்பெருந்தேர்த்திருவிழா, இன்று காலை, பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ஆண்டு தோறும், ஆடி மாதம் வெகுசிறப்பாக, தேர்த்திருவிழாவுடன், மாட்டு சந்தை, குதிரை சந்தையும் நடப்பது, இக்கோவில் பண்டிகையின் தனிச்சிறப்பாகும். இன்று நடக்க உள்ள பூச்சாட்டுதலுக்காக, நேற்று இரவு, கோவிலில் இருந்து, குருநாத ஸ்வாமியை, வனத்துக்கு எடுத்து சென்றனர். அங்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. இன்று காலை, பூச்சாட்டுக்குப்பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, மதியம், சுவாமி கோவிலை வந்தடையும். வரும், 30ம் தேதி கொடியேற்றுதலும், ஆகஸ்ட், ஆறாம் தேதி முதல், வனபூஜையும், வரும், 13 முதல், 16ம் தேதி வரை மாட்டு சந்தையுடன் கூடிய, தேர்த்திருவிழா விமரிசையாக நடக்க உள்ளது. மேலும், 13 முதல், 16ம் தேதி வரை நடக்க உள்ள மாடு மற்றும் குதிரை சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், மாடுகள், குதிரைகள், வெளிநாட்டு ஆடுகள், பறவை இனங்களும் விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வருவர். இவற்றை பார்க்க, ஆயிரக்கணக்கான மக்கள், பக்தர்கள் வந்து செல்வார்கள். கோவில் சந்தைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு, நீர் ஆதாரமாக விளங்கிய, கெட்டிசமுத்திரம் ஏரி, வறட்சியால் சொட்டு தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனால், கோவில் நிர்வாகம் சார்பில், கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து, கால்நடைகளின் தாகத்தை போக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.