பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
11:07
பழநி : விடுமுறையை முன்னிட்டு, பழநியில் குவிந்த பக்தர்கள், ’வின்ச் ஸ்டேஷனில்’ நான்கு மணிநேரம் காத்திருந்து, மலைக்கோவிலுக்கு சென்றனர். பழநி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்வதற்காக, ’வின்ச் மற்றும் ரோப்கார்’ இயக்கப்படுகிறது. ஆண்டு பராமரிப்பிற்காக ரோப்கார், ஜூலை 28 முதல், ஆக., 27 வரை நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால், கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழநி வந்திருந்தனர். ரோப்கார் இயங்காததால், வின்ச் மூலம் மலைக்கோவில் செல்வதற்காக வந்த பக்தர்களின் கார், வேன்கள் கிரிவீதியின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன. வாகனங்களை ஒழுங்குபடுத்த, போதிய போலீசார் நியமிக்கப்படாததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் சிரமப்பட்டனர். வின்ச் ஸ்டேஷனில் மட்டும், பக்தர்கள் அதிகபட்சமாக, நான்கு மணி நேரம் காத்திருந்தனர். மலைக்கோவில் பொது தரிசன வழியில் இரண்டு மணிநேரம் காத்திருந்து, மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.