தேனி ஆடி பெருக்கு: கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2014 01:08
தேனி : ஆடிப்பெருக்கு நாளை தொடர்ந்து கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். ஆடிப்பெருக்கினையொட்டி தேனி மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தேனி வீரகாளியம்மன், பத்திரகாளியம்மன், வீரபாண்டி கவுமாரியம்மன் ஆகிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.வீரபாண்டி ஆற்றில் இலை தீபம் ஏற்றி வழிபட்டனர். சிலர் ஆற்று மண் எடுத்து கரையில் அம்மன் சிலை வடித்து பூஜைகள் செய்து, தீபம் ஏற்றி ஆற்றில் விட்டனர். தாலி பெருக்கி போட்டனர். கைகளில் மஞ்சள் கயிறு கட்டி அம்மனை வழிபட்டனர்.வீரப்ப அய்யனார் கோயில், சுருளி வேலப்பர், மாவூத்து வேலப்பர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.கம்பம்: ஆடிப் பெருக்கையொட்டி, சுருளி அருவியில் குளிப்பதற்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுருளிவேலப்பர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அன்னதானம் வழங்கினர்.பெரியகுளம்: கோயில்கள் மற்றும் வீடுகளில் பெண்கள் குழுக்களாக சேர்ந்து, தங்களது கணவருக்கு தீர்க்க ஆயுள் வேண்டி புதிதாக தாலி கயிறு கட்டிக்கொண்டனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர், வரதராஜப்பெருமாள், மாரியம்மன், சீலைக்காரி உள்ளிட்ட கோயில்களில் குலதெய்வ வழிபாடு நடந்தது. உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன்-பூலாநந்தீஸ்வரர் கோயில், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பெண்களுக்கு சிறப்பு திருமாங்கல்ய பூஜைகள் நடந்தது.