திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அம்மச் சார் அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் 8ம் ஆண்டு பால்குட பெருவிழா நடந்தது. காலை 8:30 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி அழைக்கப்பட்டது. தொடர்ந்து 9:00 மணிக்கு வேண்டுதல் உள்ள பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக செண்டைமேளம் முழங்க ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வாணவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை மணலூர்பேட்டை பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.