வானூர்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு எல்லைகாளியம்மன் கோவில் திருவிழாவில் 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, பூத்துறை செல்லும் சாலையில் எல்லைகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம், ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எல்லை காளியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர், அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 :00 மணிக்கு நவசக்தி பீடத்தில் காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.