பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
திருத்தணி : திருத்தணி அருகே, மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பின், தீ மிதி திருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு கிராமத்தில், மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் உள்ளது. ஆரம்ப காலத்தில் குடிசையில் இயங்கி வந்த கோவில், 2009ம் ஆண்டு, புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.கோவில் நிர்வாகத்தில் சிக்கல் இருந்து வந்ததால், கடந்த 30 ஆண்டுகளாக, இக்கோவிலில் தீ மிதி திருவிழா நிறுத்தப் பட்டது.இந்த நிலையில், ஆடி மாதம், தீ மிதி திருவிழா நடத்த வேண்டும் என, கிராமவாசிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் தீர்மானம் செய்தனர். அதன் படி, இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழா, வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை ஒட்டி தினமும், காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு ஹோமம் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. விழாவின் கடைசி நாளான, 11ம் தேதி மாலை, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், கிராமத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.