பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அவதானபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். விழாவின், முக்கிய நிகழ்வான பூங்கரகம் தலை கூடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அவதானபட்டியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழா ஏழு நாட்கள் நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த ஏழு நாட்களுக்கு முன் கொடியேற்றம், விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு பம்பை மேளம், கோலாட்டம் மற்றும் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான பெண்கள் மாவிளக்கு எடுக்கு நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது. இதில், அவதானபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு, சிறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, மாவிளக்கு எடுத்து மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து, பூங்கரகம் தலை கூடும் நிகழ்ச்சி கோவிலுக்கு எதிரே நடந்தது. இதில், அவதானபட்டியை சேர்ந்த பூசாரி ஒருவரும், நெக்குந்தியை சேர்ந்த பூசாரி ஒருவரும் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை எடுத்து வந்து ஒன்றாக கூடினர். இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். இதனையடுத்து, பக்தர்கள் நேர்த்தி கடனாக கோவிலில், ஆடுகளை பலியிட்டு சமைத்து, உறவினர்களுக்கு விருந்தளித்தனர். இதன்படி, நேற்று மதியம் மட்டும் கோவில் வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது. கோவில் திருவிழாவையொட்டி, அவதானபட்டியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.