பதிவு செய்த நாள்
13
ஆக
2014
01:08
திருப்பூர்: திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில், 750 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என, இந்து முன்னணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்து முன்னணி, வடக்கு பகுதி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். கோட்ட பொது செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: திருப்பூர் இந்து முன்னணி சார்பில், 27வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 29 முதல் 31 வரை கொண்டாடப்படுகிறது. 750 இடங்களில், வரும் 29ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்காக, மூன்றரை அடி முதல் 11 அடி வரை, கற்பக விநாயகர், அன்னவிநாயகர், சிங்கமுக விநாயகர், சிவன்மடியில் அமர்ந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தயார் நிலையில் உள்ளன. சதுர்த்தி விழாவின்போது விளையாட்டு போட்டிகள், ஆன்மீக சொற்பொழிவு கள், திருவிளக்கு பூஜை, கோலப்போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விசர்ஜன ஊர்வலம் வரும் 31ம் தேதி மாலை 4.00 மணிக்கு, வடக்கு பகுதி ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்தும்; தெற்கு பகுதி ஊர்வலம், தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகில் இருந்தும்; மேற்கு பகுதி ஊர்வலம், கருவம்பாளையத்தில் இருந்தும் துவங்கி, ஆலங்காடு பகுதியில் நிறைவடையும்; தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில், பா.ஜ.,பார்லிமென்ட் செயலாளர் சண்முக சுந்தரம், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி பொது செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.