பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உலக நன்மைக்காக, 57 ஆண்டுகளுக்கு பின், 1,001 கலசாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜை, நேற்று நடந்தது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கடந்த, 1957ம் ஆண்டு உலக நன்மைக்காக கலசாபிஷேகம் நடந்தது. கோவில் திருப்பணி மேற்கொள்ளும் போது, ஸ்வாமி சிலைகளில் இடமாற்றம், கவசங்களை மாற்றி அமைக்கும் போதும், இது போன்ற சிறப்பு பூஜை செய்யப்படும். ஸ்ரீரங்கம் கோவிலில், நேற்று காலை, 1,001 கலசாபிஷேக பூஜையை முன்னிட்டு, நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் யாகசாலை பூஜை துவங்கியது. முன்னதாக, காவிரியில் இருந்து, ஒரு தங்க கலசம், 520 தாமிர கலசம், 400 செம்பு கலசம், 80 பித்தளை கலசம் என, 1,001 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. கலசாபிஷேகம் விழாவை, ரங்கநாத பட்டர், சுந்தர்பட்டர், நந்து பட்டர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பட்டர்கள் நடத்தினர்.