மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு, 18 படி பச்சரிசியில் தயாரித்த மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்குறுணி விநாயகருக்கு, வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் தயாரித்த மெகா கொழுக்கட்டையை பட்டர்கள் டோலியில் துாக்கி வந்து படைத்தனர்.
பின், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில், உற்சவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட களிமண் பிள்ளையார் எழுந்தருளி பூஜைகள் நடந்தது. கோயில் மண்டபகங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் திருநகர் சித்தி விநாயகர் கோயிலிலும் விழா நடந்தது.